புதிரை விடுவித்தால் ஒரு மில்லியன் டாலர் பரிசு - அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிந்துவெளிப் பண்பாட்டு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சிந்துவெளிப் பண்பாட்டு கருத்தரங்கு
தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு” என்ற நூலினை வெளியிட்டு, அதை தொடர்ந்து சர் ஜான் மார்ஷல் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்ற கற்பனையை வரலாறாக சொல்லி வந்தனர். அதை மாற்றியது சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷலின் ஆய்வுகள்தான்.
சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது, அங்கே பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என அவர் நூற்றாண்டுக்கு முன் சொன்னது இன்று வலுப்பெற்றுள்ளது. சிந்துவெளியில் இருந்த காளைகள் திராவிடத்தின் சின்னம். சிந்துவெளி குறியீடுகளும் தமிழக அகழாய்வு குறியீடுகளும் அறுபது சதவீதம் ஒத்துப் போகின்றன.
கீழடியை போன்று பெருநை அருங்காட்சியகம் தொடர்பாக எட்டு இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழ் சமூகத்தின் தொன்மைகளை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை, தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது" என கூறினார்.
ஒரு மில்லியன் டாலர் பரிசு
அதனை தொடர்ந்து 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலாவதாக, "சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.
இரண்டாவதாக, சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி மேற்கொள்ள தலை சிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாவதாக, தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகே தெரிந்து கொள்ள வேண்டும் என ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்கவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்" என அறிவித்தார்.