“கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளை பெற்றேன்” - துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம்

dubaiexpo2022 mkstalinindubai stalinwrites
By Swetha Subash Mar 27, 2022 02:33 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணம் குறித்து, ‘வணக்கம் துபாய்.. உமது பேரன்பில் மகிழ்கிறேன்!’என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் என்று உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் பெருமையைவிட, அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கமாகும்.

அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்காலத்தில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் உள்ளான நமது மாநிலத்திற்கு, கடந்த 10 மாதகாலமாகத்தான் உதயசூரியன் வெளிச்சத்தால் விடியல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். முதலீட்டாளர்களுடன் சந்திப்பு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.

இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கானப் பயணம். கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

“கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளை பெற்றேன்” - துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் கடிதம் | Mk Stalin Writes To Party Members On Dubai Trip

இந்தப் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும்கூட மனதாரவும் மனதளவிலும் பாராட்டவே செய்கிறார்கள்.

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான், தமிழ்நாட்டை ஆளும் கழக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கழக அரசு முனைப்புடன் உள்ளது.

அமீரகப் பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது. கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன்.

திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் உங்களை சந்திக்கத் தாய்த் தமிழ்நாடு வருகிறேன்!” என குறிப்பிட்டிருகிறார்.