முதலமைச்சர் முக ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி

M K Stalin International Women's Day
By Fathima Mar 07, 2026 11:44 AM GMT
Report

உலக மகளிர் நாளையொட்டி பெண்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் முக ஸ்டாலினின் வாழ்த்து செய்தியில், உலகை இயக்கும் பேராற்றலான என் அன்புக்குரிய தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும் இனிய உலக மகளிர் நாள் வாழ்த்துகள்!

“பெண் ஏன் அடிமையானாள்?” எனக் கேள்வியெழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் தந்தை பெரியார்.

அவரது கொள்கை வழித்தோன்றலாக கலைஞர் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை அளித்துச் சட்டம் நிறைவேற்றினார், அரசுப் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அளித்தார்.

முதலமைச்சர் முக ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி | Mk Stalin Womens Day Wishes

இத்தகைய பெண்ணினக் காவலர்களின் வழியிலான நமது திராவிட மாடல் அரசு இந்த ஆட்சியையே மகளிரின் உயர்வுக்கான ஆட்சியாக நடத்தி வருகிறது. 

பெண்கள் சுதந்திரமாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் சென்று வர விடியல் பயணம், அவர்களின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்,

அவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் புதுமைப்பெண், அவர்களின் சமையல் சுமையைக் குறைக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அவர்கள் பாதுகாப்பாகத் தங்க, தோழி விடுதிகள்,

தனியார் தொழிற்சாலைகளிலும் அவர்களுக்குக் குறிப்பிட்ட விழுக்காட்டில் பணியிடங்கள் ஒதுக்கீடு, பெண்களின் பெயரில் சொத்துப்பதிவு செய்தால் பதிவுக் கட்டணத்தில் சலுகை, 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாகக் கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசி,

ஆதிதிராவிட – பழங்குடியினப் பெண்களுக்கான நன்னிலம் நிலவுடைமைத் திட்டம், திருக்கோயில்களில் பெண் ஓதுவார்கள் நியமனம், பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புக்காக உலக வங்கியுடன் இணைந்த தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம்(TN-WESAFE) திட்டம்,

முதலமைச்சர் முக ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து செய்தி | Mk Stalin Womens Day Wishes

கிராமப் புறங்களில் இருந்தும் பெண் தொழில் முனைவோர்களை வளர்த்தெடுக்கும் TNRISE திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களால் நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மகளிர், வெல்லும் தமிழ்ப் பெண்களாக வரலாறு படைத்து வருகின்றனர்.

அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் இப்போதே அறிவித்துள்ளதுடன், மூன்று மாதங்களுக்கான தொகையை முன்பணமாகவும், 2 ஆயிரம் ரூபாயைக் கோடைக்காலச் சிறப்பு நிதியாகவும் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து அவர்கள் மனம் மகிழச் செய்துள்ளோம்.

தரமான கல்வியும், உயர் வேலைவாய்ப்புகளும் தன்னிறைவும், பொருளாதாரச் சுதந்திரமும், அனைத்துக்கும் மேலாக சிறந்த உடல்நலனும் கொண்டவர்களாகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிரையும் உயர்த்தும் சமூக விடுதலை இலக்கினை அடுத்த 5 ஆண்டுகளில் உறுதியாக அடைவோம்! 

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட தமிழ்நாடு எனும் என் இலட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கள்தான்! உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.