யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து; ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

M K Stalin
By Karthikraja Aug 20, 2024 04:30 PM GMT
Report

யுபிஎஸ்சி நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுபிஎஸ்சி நேரடி நியமனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் போன்ற பதவிகளுக்கு 45 காலி இடம் உள்ளது. இந்த காலி பணியிடங்களை நேரடி நியமனம் (Lateral Entry) மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 

mk stalin

சிவில் சர்விசஸ் தேர்வில் தேர்ச்சி பெறாமல், இட ஒதுக்கீடு இல்லாமல் யுபிஎஸ்சி இந்த நியமனங்களை மேற்கொண்டிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென காங்கிரஸ், திமுக, பாமக எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தன. பாஜகவின் கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதனையடுத்து நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யு.பி.எஸ்.சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியிருந்த கடிதத்தில், “வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதனால் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு நேரடி நியமனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். 

பாஜக அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டைக் ஒழிக்க முயற்சிக்கிறது. மேலும், இடஒதுக்கீட்டின் 50% உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும், மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.” என தெரிவித்துள்ளார்.