உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
உக்ரைன் மீது ரஷ்யா 16-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள், குழைந்தைகள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும், உக்ரைன் நாட்டின் மக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா.சபை அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த போரினால் தவித்து வந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேசன் கங்கா’ என்ற திட்டத்தை வகுத்து இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வந்துள்ளது.
அந்த வகையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் சுமார் 2 ஆயிரம் தமிழர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீட்பு குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழுவில் திமுக எம்.பி. திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், மத்திய அரசுடன் இணைந்து தமிழக குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து பத்திரமாக நாடு திரும்பினர்.
இந்திய அரசு அணுப்பி வைத்த போர் விமானங்கள் மூலமாகவும், தமிழர்கள் டெல்லி வந்து பின்னர் சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.
பல்வேறு குழுக்களாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் திரும்பி இருந்தனர். இந்த நிலையில் உக்ரைனில் தவித்து வந்த கடைசி தமிழக மாணவர்கள் குழுவும் பத்திரமாக நாடு திரும்பியது.
தமிழகம் வந்த மாணவர்கள் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மேலும், அவர்களின் பயணம் மற்றும் உடல்நலம் குறித்தும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் முதலமைச்சருடன் இருந்தனர்.