என் மேல் குறை சொன்னாலும் பரவாயில்லை: முக ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து குழு ஒன்றினை அமைத்துள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் தலைமை கழகத்தின் பிரதிநிதிகளாக எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள், எனது காதுகளாக செல்பவர்கள்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டும் உங்கள் வேலை.
நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம், யாரையும் பழிவாங்கவும் எண்ணக்கூடாது. இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும், ஒருவர் மட்டும் தனியாக சந்திக்ககூடாது.
கழகத்தினரை மனதுவிட்டு பேச அனுமதியுங்கள், அவர்களின் குறைகளை தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டுத்தீர்க்கட்டும்.
தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை, அதை குறித்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும் தான் எனக்குத்தேவை.
டாக்டரிடம் பொய் சொல்லக்கூடாது என்பார்கள், இப்போது நானும் அந்த இடத்தில் தான் இருக்கிறேன், என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
நோய் என்னவென்று தெளிவாக தெரிந்தால் தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது, குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக்கூடாது.
அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும், பிரச்சனைகளை சரிசெய்து நம்மை மாற்றிக்கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் கழகத்தில் மாற்றங்கள் சீர்திருத்தங்களை செய்யப்போகிறேன்.
அதனால் ஸ்கேன் ரிப்போர்ட்போல துல்லியமாக இருக்க வேண்டும். அடுத்த மாதம் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இதன் மீதான நடவடிக்கைகளை மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
