உதயநிதி துணை முதல்வராகிறார்..? வாழ்த்து மடலில் குறிப்பிட்டு சொன்ன முதல்வர் முக ஸ்டாலின்..!

Thai Pongal M K Stalin Tamil nadu DMK
By Karthick Jan 13, 2024 10:51 AM GMT
Report

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், துணை முதல்வர் பதவி சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து மடல்

உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி - மத பேதமற்ற சமத்துவத் திருநாள்! ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் ஏதுமின்றி, திராவிடர்களாம் தமிழர்களின் தனிச் சிறப்புமிக்க தொன்மைமிகு பண்பாட்டின் கொண்டாட்டமாக அமைந்திருப்பது தை முதல் நாளாம் பொங்கல் திருநாள்!   

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இழந்துவிடாத வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு எதிர்கொண்ட மிச்சாங் மழை - வெள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதிலும் மீட்டெடுப்பதிலும் நமது திராவிட மாடல் அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றியது.

mk-stalin-vazhthu-maadal-for-thai-pongal-

கடும் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் அவர்களிடம் புதுடெல்லியில்,தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் நானே நேரில் சென்று வலியுறுத்தியபோதும், அத்தகைய அறிவிப்போ, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான நிதியோ வரவில்லையென்றாலும், நம் மக்களைக் காக்க வேண்டிய கடமையை உணர்ந்து, மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் நிதி வழங்கியதுடன், வீடுகளை இழந்த குடும்பத்தினர், படகுகள் சேதமான மீனவர்கள், உயிரிழப்புகளை எதிர்கொண்டவர்களின் குடும்பத்தினர், பயிர்கள் பாதிக்கப்பட்ட உழவர்கள், தொழில் முடங்கிய வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கான நிவாரணத் தொகையையும் உயர்த்தி அறிவித்து வழங்கி வருகிறது திராவிட மாடல் அரசு. வணிகர்களுக்கான கடன் வழங்கும் முகாம்கள், முக்கியமான சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள், நோய்த்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான மருத்துவ முகாகம்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றுள்ளன.

முதலமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் இந்தப் பணிகளை மேற்கொண்ட வேளையில், என்னை முதலமைச்சராக்கிட அயராது உழைத்த அன்பு உடன்பிறப்புகளாம் தி.மு.கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரவர் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, அவர்களின் துயர் துடைக்கும் கைகளாகச் செயல்பட்டீர்கள். கழகத்தினரின் இத்தகைய செயல்வேகம் குறித்த செய்திகள்தான் என்னுடைய பணிக்கு ஊக்கம் தரக்கூடியவை. 

மக்களுக்கான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்வேகம் அளிப்பவை. நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிடும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் மக்களிடம் இருப்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். அதனால்தான் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று திராவிட மாடல் அரசு அறிவித்தது. அத்துடன், ரொக்கத் தொகையும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தை நான் அறிந்தேன்.

கடுமையான நிதி நெருக்கடி நிலவிய சூழலிலும் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் புறந்தள்ளாமல் பரிசீலித்தேன். சர்க்கரை நாவில் இனிக்கும். ரொக்கப் பணம் மனதில் இனிக்கும் என்பதால் தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் கூடுதல் மகிழ்ச்சி பொங்கிடும் வகையில் 2 கோடியே 19 இலட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.


ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசுத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,436.19 கோடி ரூபாய் ஆகும். அத்துடன் 1 கோடியே 77 இலட்சம் சேலைகளும் வேட்டிகளும் ஏழை - எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக நியாய விலைக் கடைகள் மூலம் இந்த ஆண்டுதான் பொங்கலுக்கு முன்பே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆயிரம் ரூபாய், ஜனவரி 10-ஆம் தேதியே அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பொங்கலின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது நமது திராவிட மாடல் அரசு.

mk-stalin-vazhthu-maadal-for-thai-pongal-

எத்தனை நெருக்கடிகள் சூழ்ந்தாலும், நம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிை யை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் அரசாக கழக அரசு தன் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீட்டினைத் தமிழ்நாடு பெறக்கூடிய வாய்ப்பும். 

அதன் வாயிலாக 26 இலட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு அமையக்கூடிய சூழலும் உருவாகியுள்ளது. சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்த முதலீடுகள் மூலமாக தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் அமைக்கப்படவிருப்பதால் பரந்துபட்ட வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலைக் காணவிருக்கிறது நமது மாநிலம்.

பொருளாதாரப் பள்ளத்தாக்கில் விழுந்துகிடந்த தமிழ்நாட்டை இரண்டரை ஆண்டுகளில் மிகுந்த பாடுபட்டுச் சமதளத்திற்குக் கொண்டு வந்து, சிகரத்தை நோக்கிப் பயணிக்கச் செய்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. நமது அரசின் இந்த முயற்சிகளை சென்னையில் ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர்கள் பலரும் பாராட்டியதுடன், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கவும் உறுதியளித்துள்ளனர். 

mk-stalin-vazhthu-maadal-for-thai-pongal-

நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இன்று இந்தியாவுக்கான முன்னோடித் திட்டங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். மற்ற மாநிலங்களின் தேர்தல் களங்களில் திராவிட மாடல் அரசின் திட்டங்களே வாக்குறுதிகளாக அளிக்கப்படுகின்றன.  

எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் அரசின் அடிப்படைக் கோட்பாடு. நான்தான் எல்லாம் என்கிற போக்கில் செயல்படுகிற ஆட்சியதிகாரம் ஜனநாயகத்திற்குச் சீர்கேடு. அத்தகைய சீர்கேட்டை அகற்றி, ஜனநாயகம் மலர்வதற்கு மாநிலங்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படக்கூடிய ஒன்றிய அரசு 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைந்திட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கக்கூடிய, மதநல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய, மதவெறிக்கு இடந்தராத, மொழி ஆதிக்க சிந்தனையில்லாத மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற ஓர் அரசை அமைப்பதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அதற்கான உற்சாகத்தைத் தரும் தொடக்க விழாவாக இந்தப் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது.

தை பிறக்கிறது. இனி வரும் மாதங்களில் வழி பிறக்கட்டும். தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகச் சென்னை சங்கமம் நிகழ்வில் கேட்கின்ற பறை முழக்கம், தமிழ்நாட்டிற்கான வெற்றி முழக்கமாக அமையட்டும். ஜனவரி 21 அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு எழுப்புகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும்.

எழுச்சிமிகுந்த இளைஞரணி மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் திரண்டு வரத் தயாராகியுள்ள நிலையில், வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைட் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்... உழைக்கிறேன்... உழைக்கிறேன்... ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர்.

அதற்கு இளைஞரணிச் செயலாளர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியே, "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்குத் துணையாகத்தான் இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

இளைஞரணி மாநாட்டின் மாநில உரிமை முழக்கம் எனும் நோக்கத்தைத் திசை திருப்ப நினைக்கும் எந்த முயற்சிகளுக்கும் கழகத்தினர் யாரும் இடம் கொடுத்திட வேண்டாம். மாநில உரிமைகளைக் காத்து கூட்டாட்சி இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தைச் செயல்படுத்தவே சேலம் இளைஞர் அணி மாநாட்டின் நோக்கமாகும். அந்த நோக்கத்தின் எதிரிகள்தான் இது போன்ற உள்நோக்கம் கொண்ட வதந்திகளை பரப்புகிறார்கள்.

கழகத் தலைவர் என்கிற பொறுப்பு உங்களில் ஒருவனாகிய எனக்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒப்புதலுடன், பொதுக்குழுவின் ஒட்டுமொத்த ஆதரவுடன் வழங்கப்பட்டிருக்கிற பொறுப்பு. முதலமைச்சர் என்கிற பொறுப்பு உடன்பிறப்புகளின் அயராத உழைப்பிலும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும் கிடைத்தது ஆகும். நம்பிக்கை வைத்து பொறுப்பினை வழங்கிய உங்களின் நலனுக்காக, என் சக்திக்கு மீறி உழைக்கின்ற வலிமை என்னிடம் உள்ளது. தலைவர் என்ற உரிமையோடும் அன்போடும் கட்டளையிடுவது. திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தை சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள்.  

நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும். எப்போதும் பொங்கல் அன்று கழகத் தோழர்கள் என்னைச் சென்னையில் வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இம்முறை கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் 'சமத்துவப் பொங்கல்' என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்.

mk-stalin-vazhthu-maadal-for-thai-pongal-

கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் - மாடுபிடி வீரர்கள் என வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க வேண்டும்.

கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் சமத்துவப் பொங்கல் எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்தாகும்.

பொங்கல் கொண்டாட்டம் தரும் ஊக்கத்தோடு, நமக்குக் காத்திருக்கும் பணிகள் இரண்டு! தாய்த் தமிழ்நாட்டை மேம்படுத்துவது முதலாவது. இந்திய ஒன்றிய அரசில் சமூகநீதி சமதர்ம - மதச்சார்பற்ற நல்லரசை அமைப்பது இரண்டாவது. இவை இரண்டையும் அடைய எந்நாளும் பாடுபடுவோம்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய பொங்கல் - தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! என வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்.