திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்
தேர்தல் தோல்வி மற்றும் எதிர்க்கட்சியாக செயல்படுவது குறித்து ஆலோசிக்க, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
அதில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது..,
திமுக தோல்விக்கு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. கட்சித் தலைவர் என்ற முறையில் இந்தத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் என்றார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தன்னால் முடிந்த அளவு கடுமையாக உழைத்ததாகவும், நிர்வாகிகளையும் ஓய்வில்லாமல் உழைக்க வைத்ததாகவும் கூறினார்.
இதுவரை எந்த அரசும் செய்யாத பல திட்டங்களை நாங்கள் செய்தோம். மக்களுக்கு நேரடியாக பயன் தரும் ஆட்சியாக திமுக அரசு இருந்தது என்றும் தெரிவித்தார்.

தோல்வி என்பது அரசியலில் சகஜம் என்றும், மற்ற கட்சிகளைப் போல எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர விடுதிகளில் மறைத்து வைக்க வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
சமூக வலைதளங்களில் தற்போதைய ஆட்சியை விமர்சிக்கும் பதிவுகள் அதிகரித்து வருவதாகவும், அதுவே திமுக ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார்.
சூரியன் ஒருபோதும் மறையாது, திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும்கூட என்று கூறினார்.
கட்சியில் எங்கு குறைபாடு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை பெற்று திமுக அமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.