மெட்ரோ திட்டத்தில் திமுக அரசின் பங்களிப்பை மறைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்

M. K. Stalin Tamil nadu DMK
By Vinoja Oct 08, 2026 09:14 AM GMT
Report

பூந்தமல்லி – போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் வரும் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றியதில் திமுக அரசின் பங்கு வரலாற்றில் எவராலும் மறைக்க முடியாததாக இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தாம் துணை முதல்வராக இருந்தபோது சென்னை மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டதாகவும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) நிதியுதவியைப் பெற்று முதற்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ திட்டத்தில் திமுக அரசின் பங்களிப்பை மறைக்க முடியாது - மு.க.ஸ்டாலின் | Mk Stalin Statement About Vadapalani Metro

இதன் மூலம் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து முனையம் உள்ளிட்ட முக்கியப் போக்குவரத்து மையங்கள் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறும்

2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு, சுணக்கம் கண்டிருந்த மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டதாகவும், ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு தாமதமான போதிலும் மாநில அரசின் நிதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் இரண்டாம் கட்டத்துக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு ஏற்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை பல்வேறு கட்டங்களில் நேரில் ஆய்வு செய்ததுடன், மூன்றாம் கட்ட விரிவாக்கத் திட்டங்களையும் முன்னெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

MRTS சேவையை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடத்தை 2025-ஆம் ஆண்டுக்குள் திறக்க நடவடிக்கை எடுத்தபோதும், ரயில்வே வாரியத்தின் சிக்னல் ஒப்புதல் தாமதம் மற்றும் பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, திமுக ஆட்சிக்காலத்தில் அதைத் திறக்க முடியவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனினும், மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள அவர், சென்னை மெட்ரோ திட்டத்தை நிறைவேற்றியதில் திமுக அரசின் பங்களிப்பு வரலாற்றில் நிரந்தரமாக இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.