அது நடக்காமல் இருந்திருந்தால் கலைஞரே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருப்பார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பெரியாருக்கும் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா
சுதந்திரப் போராட்ட தியாகியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா பழ.நெடுமாறன் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, “தோழர் நல்லகண்ணு நூறு” என்கிற கவிதை புத்தகத்தை வெளியிட்டார்.
நல்லகண்ணுவிற்கு வாய்ப்பு
இதனையடுத்து நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணு ஐயாவை வாழ்த்துவதற்காக நாங்கள் வரவில்லை. வாழ்த்து பெறுவதற்காக வந்திருக்கிறோம். சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் பணியில் எங்களை வாழ்த்துங்கள் என கேட்க வந்திருக்கிறோம். உங்கள் வாழ்த்தை விட எங்களுக்கு பெரிய ஊக்கம் கிடைத்து விடப் போவதில்லை.
பெரியாருக்கும் கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணு ஐயாவிற்கு கிடைத்திருக்கிறது. 100 வயதை கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ் சமுதாயத்திற்காக இன்னும் உழைக்க தயாராக இருக்கும் உள்ள உறுதியோடு அமர்ந்திருக்கக் கூடிய நல்லகண்ணு ஐயாவுக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவுடமை இயக்கம், திராவிட இயக்கம், தமிழ் தேசிய இயக்கம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறோம். இந்த நேரத்தில் 'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு' என்ற பாரதிதாசனின் கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது.
நிவாரண நிதி
இவரது 80வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய கலைஞர், வயதால் எனக்கு தம்பி. அனுபவத்தால் எனக்கு அண்ணன். என்னை விட வயதில் இளையவர். ஆனால் அனுபவத்திலும் தியாகத்திலும் நம்மை எல்லாம் விட மூத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால் நானே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருப்பேன் என்றவர் தலைவர் கலைஞர்.
2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து முதன் முதலில் அறிக்கை வெளியிட்டவர் நல்லகண்ணு. அப்போது அதிமுக கூட்டணியில் இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கண்டனத்தை பதிவு செய்தார். கலைஞர் நல்லகண்ணுவிற்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் 2022 ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை.
இந்த விருதுடன் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இதனுடன் ரூ. 5,000 சேர்த்து 10,05,000 ரூபாயை தமிழக அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர். உழைப்பால் கிடைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்து, தான் வேறு, இயக்கம் வேறு என்று பார்க்காமல் உழைத்தவர்" என பேசினார்.