இஸ்லாமியர்களுடன் தொப்புள் கொடி உறவு.. ரமலான் விழாவில் நெகிழ்ந்த மு.க.ஸ்டாலின்
ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்து பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமின்றி உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நான் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். தங்களை வருத்திக் கொண்டு உணவு உண்ணாமல் நோன்பிருந்துகொண்டு ஏழை, எளியவர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்வது மனிதநேயத்தின் மறு உருவமாக காட்சியளிப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள இந்த மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அனைவருக்கும் உதவி சேர வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை, லட்சியம். அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல் என்று சொல்கிறோம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சிறுபான்மை மக்களுக்கு குரல்கொடுத்த உறவுதான் உங்கள் வீட்டு பிள்ளையான திமுக. இது தொப்புள்கொடி உறவு. திமுக என்றால் அதில் நானும் ஒருவன். நான் எப்போதும் உங்களோடு இருப்பவன். நீங்களும் என்னோடு இருப்பவர்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தது விழாவில் பங்கேற்ற மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.