காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதற்கு? இபிஎஸ்ஸை சாடிய ஸ்டாலின் - டெல்லியில் என்ன நடந்தது?
எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்றது பேசுபொருளாகியுள்ளது.
முப்பெரும் விழா
திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாவட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் தான் இன்று கரூரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் என்று சொன்னார்கள்.
திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று கூறுவோர், என்ன மாற்றப்போகிறார்கள்? மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, எவ்வளவோ நெருக்கடியில் வந்தோம்.
ஆனால் எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு, ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம். இதனால்தான் திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது.
ஸ்டாலின் சாடல்
வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்திருக்கிறார். திராவிடம் என்றால் என்ன? என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்கு தெரியாது என்று சொன்ன அவர்,
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு. அதிமுகவை தொடங்கியபோது அண்ணாயிஸம் என்று சொன்னார்கள். அதை இப்போது எடப்பாடி பழனிசாமி அடிமையிஸம் என்று மாற்றி, அமித்ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு? என்று கேட்பதைப்போல,
டெல்லியில் கார் மாறிமாறிப் போன பழனிசாமியைப் பார்த்து காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு? என்று கேட்கிறார்கள். இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கு, முதல்-அமைச்சர் பதவிக்கு, ஆட்சிக்கான போராட்டம் அல்ல.
இது தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என தெரிவித்துள்ளார். முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்றார். அவரின் இந்தச் செயல் தமிழகத்தில் கடுமையான விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.