அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின்
ஒன்றிய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மாநில சுயாட்சி கருத்தரங்கு
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் மத்திய - மாநில அரசுகள் குறித்த கருத்தரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "மாநில சுயாட்சி தொடர்பான முதல் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி. தமிழ் மண்ணிற்கு பல ஆயிரம் ஆண்டுகளாக பல்வேறு சிறப்புகள் உள்ளது.
தமிழ்நாடு அரசியல் சமூகநீதியை பின்பற்றியே உள்ளது. இந்தி திணிப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாடு பல்வேறு போராட்டங்களை நடத்தி அதை முறியடித்துள்ளது.
தற்போது, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இருமொழி கொள்கைக்கு ஆதரவாக மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஒன்றிய அரசுக்கு ரத்தகொதிப்பு
சட்ட குறுக்கீடுகள், நிர்வாக குறுக்கீடுகள் என மத்திய அரசு, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு தொல்லை தரும் வகையில் பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உரிய நியாமான நிதியை வழங்க மறுக்கிறது.
நிதி பற்றாக்குறை உள்ள காலத்தில் கூட, தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது. பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒன்றிய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அளவுக்கு மீறிய அதிகார குவிப்பால், ஒன்றிய அரசுக்கு ரத்தகொதிப்பும், மாநில அரசுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது" என பேசினார்.