கலைஞர் வழியில் தமிழ் மக்களுக்கு உழைப்பதே வாழ்நாள் கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
கடந்த 2000 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
நேற்று தொடங்கிய நிகழ்வில், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழர்களுக்கு உலக அடையாளம்
இன்று நடைபெற்ற நிகழ்வில், திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனையடுத்து கன்னியாகுமரியில் உள்ள சாலைக்கு அய்யன் திருவள்ளுவர் சாலை என்று பெயர் சூட்டினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காணும் நிகழ்ச்சியான இது என் வாழ்நாளில் சிறந்த நாளாக இருக்கிறது. இந்த சிலையை திறந்த போது கலைஞருக்கும் இருந்த அதே உணர்வு தற்போது எனக்கும் உள்ளது.
கலைஞர் வழியில், இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் உழைப்பது தான் என்னுடைய வாழ்நாள் கடமை. ஒரு சிலை அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேட்டார்கள். திருவள்ளுவர் தமிழர்களுக்கு உலக அடையாளம். திருக்குறள் தமிழ்நாட்டுடைய பண்பாட்டு அடையாளம்.
முக்கிய அறிவிப்புகள்
திமுக ஆட்சிக்கு வரும் முன்பே சட்டமன்றத்தில் வாதாடி திருவள்ளுவர் படத்தை திறக்க வைத்தவர் கருணாநிதி. போக்குவரத்துறை அமைச்சர் ஆனதும் எல்லாப் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதினார். சென்னையில் வள்ளுவர்கோட்டம் கண்டார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இவ்வாறு திருக்குறளுக்காகவே வாழ்ந்தார்.
பல தடைகளுக்கு பின் இந்த சிலை அமைக்கப்பட்டது. 7 ஆயிரம் டன் எடை கொண்ட வள்ளுவர் சிலையை பாறையில் தூக்கி நிற்கவைத்ததே பெருமை." என பேசினார். அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய படகுகள் வாங்கப்படும். முதல் படகுக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், 2வது படகுக்கு மார்ஷல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜி.யு.போப் பெயரும் சூட்டப்படும்.
திருக்குறள் வாரம்
திருக்குறளில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாவட்டந்தோறும் ஆசிரியர்கள் மூலம் திருக்குறள் தொடர்பாக தொடர் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு 133 கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கொண்டாடப்படும்.
தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். குறளும், உரையும் அரசு அலுவகங்களைப் போல தனியார் அலுவலகங்களிலும் எழுத உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். என 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.