ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு நிகரானது தமிழக காவல்துறை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
பணி நியமன ஆணை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா இன்று(27.11.2024) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
காவல்துறையின் பொற்காலம்
இந்த நிகழ்வில் பேசிய அவர், “165 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது தமிழ்நாடு. இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். காவல்துறையை மேம்படுத்த முதல்முறையாக காவல் ஆணையம் அமைத்தது திமுக அரசு. உலக அளவில் சிறந்து விளங்கும் போலீசார் மற்றும் தமிழக காவல்துறை.
காவலர்களுக்கான இடர்படி ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. திராவிட மாடல் அரசின் காலம்தான் தமிழ்நாடு காவல்துறையின் பொற்காலம்.
ஸ்காட்லாந்து யார்டு போலீசார்
குற்றங்களை குறைத்து விட்டோம் என்பது சாதனை அல்ல. குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை. குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டோம் என்று சொல்வது சாதனை அல்ல. குற்றங்களை தடுத்து விட்டோம் என்று சொல்வதே சாதனையாக இருக்க வேண்டும். ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையாக தமிழக காவத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு காவல்துறையினர் மீது பயம் இருக்கக் கூடாது. மரியாதை தான் இருக்க வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் கீழ்நிலை காவல்துறையினருடன் நட்புணர்வோடு பழக வேண்டும். கீழ் நிலை காவலர்களுக்கு பயம் வரும் வகையில் உயர் அதிகாரிகள் பழகக் கூடாது" என பேசினார்.