கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும்; சூரியன்தான் நிரந்தரம் - மு.க.ஸ்டாலின் பேச்சு
mk stalin says sun only is permanent: கொள்கை அற்ற கட்சிகள் வரும், போகும், சூரியன்தான் நிரந்தரம் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளிடம் பேச்சு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதில் பேசிய மு.க.ஸ்டாலின், " நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உள்ளது.

அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேடு ஆகிறது தான்.
மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.
நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.
முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம்.
அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன். அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம். அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம்.
இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.
கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும்.
முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும்.
அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும்.
அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.
“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.
வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும், போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்" என பேசியுள்ளார்.