தமிழர்களைக் காக்க தகுதியுள்ள ஒரே படை திமுகதான் - முதல்வர் ஸ்டாலின்
தமிழர்களைக் காக்க தகுதியும் திறமையுமுள்ள ஒரே படை திமுகதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருச்சி திமுக மாநில மாநாடு
திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12வது மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 105 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை ஏற்றினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "திரும்பிய திசைகள் எங்கும் கருப்பு, சிவப்பு என திருச்சியில் பெரும்சேனை திரண்டிருக்கிறது. என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
கழக உடன்பிறப்புகளின் உற்சாகமும், அவர்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சியும், என் வயதை குறைத்திருக்கிறது. நான் இளமை உணர்வுடன் செயல்பட காரணமே கழகத்தினர்தான்.
சொல்லாமல் சொல்லிய கே.என்.நேரு
கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவதெல்லாம் மாநாடுகள்தான். இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிர் அணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடு என இலட்சக்கணக்கான நிர்வாகிகளை இணைத்து தேர்தல் பணிகளை தொடங்கினோம்.
அதன் உச்சமாக 10 இலட்சம் உடன்பிறப்புகளுடன் இந்த மாநில மாநாடு அமைந்துள்ளது. கழக மாநில மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் திருச்சியின் தீரர் கே.என்.நேரு அவர்களுக்கு என் சார்பிலும், கழகத்தினர் சார்பிலும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு. 200 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டை நடத்தி 200 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் அமைச்சர் நேரு.
திருச்சிதான் கழகத்தின் மாநாட்டுப் பகுதி. திமுக சார்பில் நடத்தியிருக்கிற 12 மாநில மாநாடுகளில் 7 மாநில மாநாடுகள் திருச்சியில்தான் நடந்திருக்கிறது.
திமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை இதே திருச்சியில்தான் பேரறிஞர் அண்ணா எடுத்தார். அதன்படி திமுக தேர்தல் களத்திற்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது.
திருச்சி என்றாலே திமுகவுக்கு திருப்பம், திருச்சி என்றாலே திமுகவுக்கு எழுச்சி. 7வது முறை அல்ல, இனி எப்போதும் தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளும்.
கிரிக்கெட்ல முதல் பந்துல இருந்தே ரன் அடிக்கிறது முக்கியம்தான். அதேசமயம் இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, கடைசி பந்துல Winning Shot-ஆ சிக்ஸர் அடித்து ஜெய்க்கிறது Grand Finishing-ஆ இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை பெறுவதற்காகதான் இந்த மாநாடு.
நம்மை நம்பித்தான் தமிழ்நாடு இருக்கிறது
இந்தியாவிலேயே முதல் முறையாக மாநிலக் கட்சியை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. தமிழர்களைக் காக்க தகுதியும் திறமையும் கொண்ட ஒரே படை திமுகதான். தமிழ்நாட்டை நம்பித்தான் நாம் இருக்கிறோம். நம்மை நம்பித்தான் தமிழ்நாடு இருக்கிறது.
2021ல் இதே ஊரில் நடந்த மாநாட்டில் 7 இலக்குகளை அறிவித்தோம். அந்த இலக்குகளை இன்று எட்டி சாதனை படைத்துள்ளோம். ஒன்றிய அரசின் புள்ளி விபரங்களே இதனை உறுதிப் படுத்துகின்றன. நம்பர் 1 மாநிலம் என ஒன்றிய அரசு சொல்கிறது. சூப்பர் ஸ்டேட் என பத்திரிகைகள் சொல்கின்றன.
திமுக அரசின் திட்டப் பயனாளிகள் வாக்களித்தாலே போதும், நமக்கு முழு வெற்றி கிடைக்கும்; அதை உறுதி செய்வதுதான் உங்கள் பணி.
சமீப காலமாக தவணை முறையில் சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன; அதுவும் திராவிட மாடல் அரசின் திட்டத்தை டாப்-அப் செய்து அறிவிக்கின்றனர்.
ஏனென்றால் அந்த திட்டங்களில் எல்லாம் தடுக்கவோ, நிறுத்தவோ யோசிக்கக் கூட முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை நாம் கொண்டு வந்துருக்கிறோம்.
அதிமுக தொண்டர்களுக்காக வருந்துகிறேன்
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ளது என்பதை அறிந்தும், அதற்காகக் கூட பட்ஜெட்டில் மாநிலத்திற்கு எந்த திட்டங்களையும் ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இந்த அளவுக்கு திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கும் NDA கூட்டணிக்கு எங்கள் மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? பீ
காரில் நிதிஷ் குமார் முகத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது அவரை அகற்றி விட்டு முதலமைச்சர் பதவியைப் பிடிக்க உள்ளது பாஜக. இதே போல எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுக இருக்கும் வரை அது நடக்காது.
அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக விழுங்குகிறது. நேர் எதிரிகளாக இருந்தாலும் அதிமுக தொண்டர்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சியைக் கொண்டு போய், டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி” என பேசியுள்ளார்.