மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று - முதல்வர் ஸ்டாலின்
கலைஞர்தான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சாரண இயக்க வைர விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண-சாரணியர் இயக்கத்தின் வைர விழா கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் 4 வெளிநாடுகளில் இருந்து சுமார் 20,000 சாரண-சாரணியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.இதில் பேசிய அவர், "இந்தியா முழுவதும் 80 லட்சம் மாணவர்கள் சாரண சாரணியர் இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம்.
எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மையாக்கி இருக்கிறோம். சாரண இயக்கத்திற்கு ரூ.10 கோடியில் புதிய தலைமை அலுவலகம் அமைக்கப்படும்.
நவீன தமிழ்நாட்டின் சிற்பி
நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும். மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று. இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கையில் 17 இலக்குகளிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் சாரணர் சாரணியர் இயக்கப் பொன்விழா பெருந்திரள் அணி நடந்த பொழுது தமிழ்நாடு முதல்வராக கலைஞர் இருந்தார். இப்பொழுது வைர விழா கொண்டாடும் பொழுது நான் முதலமைச்சராக இருக்கிறேன்.கலைஞர் தான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கியது அவர்தான்" என பேசினார்