எரிபொருள் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
எரிபொருள் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக, உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளது.
இதனால், இந்தியாவில் LPG தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்படும் சூழல் உள்ளது.

மேலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அச்சத்தில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னரிமை அளிக்க அரசு கூறியும், மக்கள் அச்சத்தில் காலி சிலிண்டர்களுடன் சிலிண்டர் விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, 2 நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டோம்.
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய… https://t.co/N9f4XCVnXH
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 12, 2026
இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.