திராவிட மாடல்னா என்னன்னு தெரியுமா? - தேனியில் அனல் பறக்க பேசிய மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் என்றால் என்னவென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் தொண்டர்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அன்னஞ்சி பைபாஸ் சாலை அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ 259.82 கோடியிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேனி மாவட்டத்தில் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், வைகை அணை, மேகமலை, சுருளி அருவி என தேனி மாவட்டம் அனைத்திலும் சிறப்பு பெற்றது எனவும் கூறினார்.
நலத்திட்ட உதவிகளை பெற்று நீங்கள் மகிழ்வதை பார்க்கும் போது எனக்கு பூரிப்பாக இருக்கிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறியதுதான் என் நினைவுக்கு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூ 8 கோடி மதிப்பிலும், குமுளி பேருந்து நிலையம் ரூ7 கோடி செலவில் மேம்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தற்போது திராவிட மாடல் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல்தான் திராவிட மாடல், வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல் எனவும் அவர் சொல்ல தொண்டர்கள் நெகிழ்ந்து போயினர்.
மேலும் அனைத்து துறைகளிலும் சிறந்த தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.