கேரளாவிற்கு வரும் அனைவரும் இங்கே செல்ல வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வைக்கம் நிகழ்ச்சியைக் காண கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
வைக்கம் நூற்றாண்டு விழா
கேரளா மாநிலம் வைக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோயில் நுழைவுப் போராட்டம் நினைவாக, 1994 ஆம் ஆண்டு தந்தை பெரியாருக்கு தமிழக அரசு சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
இன்று(12.12.2024) வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை திறந்து வைத்தார்.
பெரியாரியத்தின் வெற்றி
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் எடுத்த ஊரில் இன்று அவருக்கு புகழ் மாலை சூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுதான் பெரியாரின் வெற்றி. பெரியாரியத்தின் வெற்றி திராவிட இயக்கத்தின் வெற்றி.
பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்நாள், வரலாற்றில் பொன்நாள். வைக்கம் நிகழ்ச்சியைக் காண கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன். வைக்கம் போரில் வெற்றி பெற்ற பெரியாரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க போற்றினார். சமூக மாற்றமே முதன்மையானது என பெரியார் போராடினார் என அம்பேத்கர் பாராட்டினார்.
கோயில் நுழைவு போராட்டங்கள்
கேரள காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று வைக்கத்தில் 5 மாதம் தங்கி போராட்டம் நடத்திய பெரியார் கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். பெரியாருக்கு எதிரான தடை உத்தரவை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு வாபஸ் பெற்றதை அறிந்து மக்கள் மகிழ்வர் என காந்தி எழுதினார்.
தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயிலுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும்.
சட்டம் தேவைதான். அதைவிட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம். 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டிய இருக்கிறது. யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை மக்கள் மனதில் மலர வேண்டும்" என பேசினார்.