நீட் விலக்கு பெறும் வரை திமுக ஓயாது..முக ஸ்டாலின் உறுதி
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம்
தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டுமென நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. மாணவ - மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகளும் நடைபெற தேர்தல் வாக்குறுதியாக நிச்சயமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறப்படும் என திமுக அறிவித்தது.
ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பப்பட்ட பிறகு ஆளுநர் முரண்பாடான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் நிலையில், அந்த மசோதா தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின் உரை
இன்று திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் சென்னை அண்ணாநகரில் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வந்தது என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியவர் ஜனாதிபதி தான் என குறிப்பிட்டு பேசிய அவர், நீட் மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் விமர்சித்தார். மேலும், நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது என கூறி, நீட் தேர்விற்கு விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என தெரிவித்தார்.