6,000 கோடி ரூபாய் நிதி வேண்டும் - பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

modi tamilnadu floods mk stalin
By Nandhini Dec 29, 2021 09:19 AM GMT
Report

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை நிரந்தரமாக சரி செய்ய தமிழ்நாட்டுக்கு 6,230 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்தது. அப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் சேதத்துக்குள்ளாகின.

இதனையடுத்து, சேதங்களை பார்வையிட மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குழு ஒன்றை அனுப்பியது. இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். இச்சூழலில் கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசினார்.

அப்போது, டெல்லியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமிழ்நாட்டிற்கு ரூ.2,079 கோடியை மழை வெள்ள நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கப்படுமென வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை தமிழ்நாட்டுக்கு நிதியானது வழங்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்றால் மாநிலத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக சீரமைக்க நிதி தேவைப்படுகிறது. எனவே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு 6,230 கோடி ரூபாய் வழங்கிட வேண்டும். தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 4,719.62 கோடியும் வழங்கிட வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.