‘இலங்கை தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்’ - சட்டப்பேரவையில் தனி தீர்மானம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.
இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர். மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்று கூறி அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்படி, அத்துறை சார்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்ய அனுமதி தரக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
மேலும், ₹80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ₹28 கோடி மதிப்பில் மருந்து, ₹15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம், ஆனால், ஒன்றிய அரசின் அனுமதியோடு தான் இதனை நாம் அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக இலங்கைக்கு ரூ.7,600 கோடி வழங்குவதாக நிதி உதவிகள் அறிவித்த மத்திய அரசு, அரிசி, டீசல் உள்ளிட்ட பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
எனினும்,மத்திய அரசு வழங்கிய உதவிகள் இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்பதால் இலங்கை மீண்டும் கடனுதவி கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில், இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.