பொங்கல் பண்டிகை - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை
தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் பண்டிகை இன்று(14.01.2025) மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!
ஜனாதிபதி திரவுபதி முர்மு
லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மாக் பிஹு பண்டிகைகளை முன்னிட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டுமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் அதிக தீவிரத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.
சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
வீரத்திலும், அறத்திலும், கொடையிலும், மாறாப் பற்றுறுதி கொண்டு தாய் மொழியாம் தமிழைத் தனது உயிராய் நினைத்து உலகு சிறக்க வாழ்ந்த இனம் தமிழினம்!
தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு காத்திட, தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் தமிழ்த்தேசியப் புரட்சிப் பொங்கல்! உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் விலக வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும்.
தவெக தலைவர் விஜய்
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்! இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எத்தனையோ பேரிடர்கள், துயரங்களுக்கு மத்தியில் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத பணியை இடைவிடாது மேற்கொண்டிருக்கும் உழவர்களை போற்றி வணங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வளமும் நலமும் நிலைக்கட்டும் எனக்கூறி தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்
சனாதனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடுகளையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதிகாரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதனை அதிகாரத்திலிருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம்.
மநீம தலைவர் கமலஹாசன்
வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்
தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவரால் வருணிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் சூழ்ந்த எண்ணற்ற இன்னல்களில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும். இந்துத்துவா சக்திகளையும், சனாதனக் கூட்டங்களையும் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி பூமியில் அடியோடு முறியடிப்போம்.