காரை நிறுத்தி விட்டு அரசுப் பேருந்தில் ஏறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென அரசுப்பேருந்தில் ஏறிய சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல்முறையாக மு,.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே ஓராண்டு நிறைவையொட்டி தனது கோபாலபுரம் இல்லம் சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் செல்லும் வழியில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனது காரை நிறுத்த சொல்லி அங்கே வந்த பெரம்பூர் - பெசன்ட் நகர் வழித்தட பேருந்தில் (29சி) ஏறி பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த மக்களிடத்தில் அவர்களது பணி குறித்தும், பேருந்து சரியாக வருகிறதா?, இலவசப் பயணச்சீட்டு கொடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். பேருந்தில் மக்களோடு மக்களாக சிறிது தூரம் பயணித்த அவர் பின் அங்கிருந்து விடைப் பெற்று சென்றார்.