பேரன் பட்டமளிப்பு விழா - 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டார் மு.க. ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை திமுக தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பினர். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை நிறைவு செய்துள்ளார்.

10 நாள் பயணம்
அவரது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு, மு.க. ஸ்டாலின் சுமார் 10 நாட்கள் லண்டனில் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார்.அதன் பின்னர் ஜூலை 20ஆம் தேதி சென்னை திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், "நாங்க இருக்கோம்... மீண்டும் வருவோம்" என்ற தொண்டர்களின் உற்சாக முழக்கத்தைக் குறிப்பிட்டு, திமுகவின் அடுத்த நூற்றாண்டு பயணத்திற்கான திட்டமிடல் பணிகள் தொடரும் என்றும், வெளிநாட்டில் இருந்தாலும் தனது மனம் அறிவாலயத்திலேயே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.