டங்ஸ்டன் சுரங்கத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது - மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

M K Stalin Narendra Modi Madurai
By Karthikraja Nov 29, 2024 07:03 AM GMT
Report

 மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கடிதம்

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

mk stalin letters to modi

அந்த கடிதத்தில், "கடந்த 7-11-2024 அன்று, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை ஒன்றிய சுரங்கத் துறை தேர்வு செய்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம்

மேற்படி டங்ஸ்டன் தொகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலம். இது குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது. 

mk stalin

இந்தப் பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்குச் சேதங்களை ஏற்படுத்தும். மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக மக்களை வெகுவாக பாதிக்கும்.

மாநில அரசின் அனுமதி

இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுக. சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றிச் சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்துக" என தெரிவித்துள்ளார்.