தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம்

M K Stalin DMK
By Fathima Apr 22, 2026 07:56 AM GMT
Report

தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீகாரைப் போல தமிழ்நாட்டையும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பா.ஜ.க தலைமையில் அ.தி.மு.க. இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்போம் என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் உறுதியான முடிவு.

தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் | Mk Stalin Letter To Dmk Cadres

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் திருவாரூரில் மார்ச் 31 அன்று தேர்தல் பரப்புரையைத் தொடங்கினேன்.

ஏப்ரல் 21 அன்று உங்களில் ஒருவனான நான் போட்டியிடும் என் கொளத்தூர் தொகுதியில் பரப்புரையை நிறைவு செய்திருக்கிறேன். தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி, அந்தக் கூட்டங்கள் நடக்கின்ற ஊரில் காலை நேர நடைப்பயணத்துடன் பொதுமக்களுடனான சந்திப்பு - கலந்துரையாடல், சாலை வலம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்தால் தமிழ்நாட்டின் நீள அகலத்தின் பரப்புக்கு இணையாக உங்களில் ஒருவனான என்னுடைய பயணமும் அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்புத் திட்டங்களான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற ஏராளமான திட்டங்களை மக்களே என்னிடம் எடுத்துச் சொன்னதுடன், 2026 தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மாதம் 2000 ரூபாய் உரிமைத் தொகை, இல்லத்தரசி திட்டத்தின் 8000 ரூபாய் கூப்பன், விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன மோட்டார் பம்பு, கல்லூரிகளின் செயற்கை நுண்ணறிவுக் கல்வி, நான் முதல்வன் திட்டத்தில் இளைய தலைமுறைக்கு திறன் பயிற்சியுடன், வேலை கிடைக்கும் வரை ஊக்கத் தொகை போன்ற வாக்குறுதிகளையும் மக்களே நினைவுபடுத்தி வரவேற்று மகிழ்ந்தனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட உடன்பிறப்புகளின் அயராத உழைப்பு, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும். ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிக்கும் பாக நிலை முகவர்களை  நியமித்து, பத்து உறுப்பினர்களைக் கொண்ட பாகக் குழுக்களையும் அமைத்து, அதில் இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் இடம்பெறச் செய்ததுடன், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் டிஜிட்டல் பூத் ஏஜண்ட் எனப்படும் ஙிஞிகி-க்களையும் நியமித்து ஒவ்வொரு பூத் வாரியாக தேர்தல் களப் பணியை மேற்கொண்டிருக்கிறது திமுக.

தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் | Mk Stalin Letter To Dmk Cadres

அத்துடன், ஓரணியில் தமிழ்நாடு செயல்பாட்டின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற்று, அவற்றை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்துள்ளனர் கழக உடன்பிறப்புகள். அன்பு உடன்பிறப்புகளே..

நீங்கள் அயராது உழைத்ததை வெற்றிகரமாக அறுவடை செய்ய வேண்டிய நாளான ஏப்ரல் 23 அன்று, இத்தனை நாட்கள் கடுமையாகப் பணியாற்றியதைவிட, அதிக விழிப்புடன் இருந்து பணியாற்றிட வேண்டும். தேர்தல் களத்தில் தி.மு.க.காரனை மிஞ்சி உழைப்பதற்கு வேறெந்த கட்சியும் கிடையாது என்கிற பெருமை நமக்கு உண்டு. அதை 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திலும் முழுமையாக மெய்ப்பித்து, மகத்தான வெற்றிக்கு ஒவ்வொரு உடன்பிறப்பும் காரணமாக இருந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய அன்புக் கட்டளை என தெரிவிக்கப்பட்டுள்ளது.