பிறந்தநாளில்... முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

M K Stalin
By Fathima Feb 27, 2026 03:57 AM GMT
Report

ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

இவரது பிறந்தநாள் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது, இதற்காக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

”கருணாநிதி - தயாளு அம்மாளின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலினின் பெயர் சூட்டப்பட்டு,

கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து,

பிறந்தநாளில்... முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் | Mk Stalin Letter To Dmk

கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; தலைவர் கருணாநிதியிடம் பயின்ற பண்புகளோடும்,

கடமை உணர்வோடும் கட்சியைக் கண்களாகவும் கருணாநிதியை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில்,

கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 73-ஆவது பிறந்தநாள்!

1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.

உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது. பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது;

பிறந்தநாளில்... முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் | Mk Stalin Letter To Dmk

கட்சிக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைகளின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது

- கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக ரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை.

இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!

இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும்.

நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும்.

நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்!

அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து! ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்!

இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.