அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

MK Stalin Latter Panchayat Leader
By Thahir Oct 18, 2021 12:41 PM GMT
Report

கொரோனாவை எதிர்த்துப் போராட தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலோனோருக்கு தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளில் ஊரடங்கு போடாமல் தப்பிக்கலாம்.

அவ்வாறு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால் தனி ஒரு அரசால் சாத்தியமில்லை. அங்கே தான் சிறு சிறு அமைப்புகளாக உள்ளாட்சி அமைப்புகள் கவனம் பெறுகின்றன.

என்ன தான் வாரத்திற்கு ஒருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தினாலும் மக்களின் ஆர்வமில்லாமல் ஒன்றும் நடக்காது.

அவர்களை ஊக்குவிக்க அந்தந்த ஊராட்சி தலைவர்களால் மட்டுமே முடியும். இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊராட்சியும் 100 சதவீத தடுப்பூசி இலக்கை அடைய வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டிலுள்ள 12,500 ஊராட்சித் தலைவர்களுக்கும், முதல்வர் கடிதம் எழுதவிருக்கிறார்.

அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவிகிதம் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு ஊராட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தவுள்ளார்.

53 லட்சத்து 64 ஆயிரத்து 679 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. செவ்வாய் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்துவதற்கு மருத்துவத் துறையின் சார்பில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி இதுவரை நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மூலம் பல லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசியை 25 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர்" என்றார்.