ஃபெஞ்சல் புயல்; இதுவரை பிரச்னை இல்லை - முதல்வர் ஸ்டாலின்
ஃபெஞ்சல் புயல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மாநில கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு நடத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல், தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு அது குறித்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.
இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், இரவு கடுமையான மழை பெய்யும் என்ற காரணத்தால் முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும் அந்த பொறுப்பு அமைச்சர்களும் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். சென்னையில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. அப்படியே இருந்தாலும் சமாளித்துக்கொள்வோம்.” என கூறினார்.