தி.நகர் ஆகாய நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை தி.நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆகாய நடைபாதை அமைப்பு
சென்னையின் மிகப் பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 கோடியே 45 லட்சம் செலவில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் இந்த ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலத்தில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆகாய நடைபாதையை திறந்து வைத்தார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.