மறைந்த முன்னாள் பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
“பேராசிரியர் தம்பி”
இதுகுறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், இனமான பேராசிரியர் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெருமிதத்தோடும் பேரறிஞர் அண்ணா அவர்களால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன்.
1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார்.
முதலமைச்சர் திறந்து வைத்தார்
பொதுவாழ்க்கை மட்டுமின்றி 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தனது பேச்சாற்றலாலும் செயல்பாடுகளாலும் பொது வாழ்வில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
அன்னாரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் சிலை திறப்பு விழா நடைபெறுகிற உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த பேராசிரியர் அன்பழகன் முழு உருவ சிலையை திறந்து வைத்தார்