தவறு செய்தது மன்னன் ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாமதுரை விழாவை துவங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மாமதுரை விழா
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாமதுரை விழா இன்று (08.08.2024) தொடங்கி 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின் அவர் பேசியதாவது, மதுரை மாநகர் என்பது பல்வேறு பெருமைகளை கொண்டது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2000 ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம் மதுரை. ஆரிய படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியன் ஆட்சி செய்த நகரம் மதுரை.
மதுரை
தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் மன்னனை கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியை காக்க தன் உயிரை தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் மதுரை. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம் உள்ள நகரம் மதுரை. அணைத்து கலைகளும் ஒருங்கே அமைய பெற்ற பண்பாட்டு சின்னமாக இந்த கோவில் கருதப்படுகிறது. புகழ் பெற்ற சித்திரை திருவிழா மாபெரும் பண்பாட்டு திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
1866 ம் ஆண்டே நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்ததாக 2 வது மாநகராட்சியாக 1971 ம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றினார் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அறை ஆடை மனிதராக மாற்றிய இடமும் மதுரை தான். என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட இடமும் மதுரை தான்.
தமிழ் பெருமை
இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல எல்லோரும் போற்றலாம். மதுரையை போற்றுவோம் என கொண்டாடலாம். நமது திராவிட மாடல் அரசில் மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளோம். சிறப்பான செயல்பாடுகளால் மதுரைக்கும் நம் அரசுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள்.
2013 ம் ஆண்டு முதல் மாமதுரை போற்றும் விழா நடைபெற்று வருகிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும் மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் என்பவரால் துவங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட இந்திர விழா போல நடத்தப்படுவது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் மொழி, தமிழினம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்கால தலைமுறை வளரனும் என பேசியுள்ளார்.