பிபின் ராவத் மரணம் : நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைகிறேன் - முதல்வர் இரங்கல்
முப்படை தளபதி மறைவுக்கு குன்னூர் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கையேட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து மறைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு டிசம்பர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிய முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை குன்னூர் சென்றடைந்தார். வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்தும், விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நீலகிரி கலெக்டர், காவல் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் இரங்கல் குறிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார்.
அதில் “தாய்த்திருநாட்டின் வீரத்திருமகன் விபத்தில் உயிரிழந்ததற்கு நாடு அடைகிற துன்பத்தில் நானும் இணைந்து எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.