துபாயில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - என்ன காரணம்?
4 நாட்கள் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடு திரும்பவுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அதேசமயம் அங்கு நடக்கும் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கைத் திறந்து வைத்தார். மேலும் துபாயில் உள்ள Museum of the Futureஐ என்ற அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர் அவர் தனது துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் அபுதாபிக்குச் சென்றார். அங்கும் பல தொழிலதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து அபுதாபி தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிலையில் 4 நாட்கள் துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடு திரும்பவுள்ளார்.இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டார். பின் ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் என பலரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக கட்சி அலுவலகமான கலைஞர் - அண்ணா அறிவாலயத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.