இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்க ரெய்டு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
mk stalin condemns raid on kn nehru house: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்க ரெய்டு நடத்தப்படுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கே.என்.நேரு வீட்டில் ரெய்டு
திருச்சியில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன்னர் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய்தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்காகவே, திருச்சியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படுவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.