திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை - மு.க.ஸ்டாலின் கண்டனம்

M K Stalin DMK
By Karthikraja Nov 20, 2026 05:00 AM GMT
Report

mk stalin condemns raid on ex minister moorthy house:  மதுரையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை

கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி. 

திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனை - மு.க.ஸ்டாலின் கண்டனம் | Mk Stalin Condemns Raid On Ex Min Moorthy House

மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில், அரசு விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.5 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானது.

இதனடிப்படையில், வழக்கு பதிவு செய்த மதுரை மாவட்ட மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர், மதுரையில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனை குறித்து தகவலறிந்த திமுகவினர், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு முன்பு குவிந்துள்ளனர்.  

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவில், "இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.

ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது" என குறிப்பிட்டுள்ளார்.