அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சை பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேச்சு
நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இரு அவைகளிலும் கடந்த 4 நாட்களாக சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின் முடிவில் ராஜ்யசபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர், அம்பேத்கர், என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக, கடவுளின் பெயரை 7 முறை சொல்லியிருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என கூறினார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று ஜெய்பீம்! ஜெய்பீம் மத்திய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேள் என முழக்கமிட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அமித்ஷாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் இன்று (18-12-24) 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2024
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!#BabasahebAmbedkar
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.