கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும் - முதலமைச்சர் அதிரடி உத்தரவு

dmkchiefstalinarikkai dmkvckelectionclash vckseatswonbydmk
By Swetha Subash Mar 04, 2022 02:21 PM GMT
Report

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவிவேற்ற நிலையில், இன்று மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட மேயர்,நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளனர்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பூந்தமல்லியில் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு

நகராட்சி தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு, வாக்கு பதிவு பாதியிலேயே நிறுத்தபட்டது.

அதேபோல் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கும் போட்டி வேட்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உத்தரவை மீறிய திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.

வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம்.

ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்.

விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." என கேட்டுக்கொண்டுள்ளார்.