புரட்டிப்போட்ட மழை - பிரதமரை சந்திக்க டெல்லி விரையும் முதல்வர்..!
தென்மாவட்டங்கள் பெய்து வரும் கனமழையின் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
வரலாறு காணாத மழை
வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப்பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.மீட்புப்பணிகளை குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
நேரம் கேட்கும் முதல்வர்
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளை குறித்து ஆலோசனை நடத்த பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும்,
தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், நாளை (19.12.2023) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சூழலில், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.