2030 ஆம் ஆண்டிற்குள்... முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து வருகிறார்.
2030 ஆம் ஆண்டிற்குள்..
இதில் பேசிய அவர், "1.80 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாகச் சென்று கனவு, தேவைகள் எதிர்பார்ப்புகளை கேட்டுள்ளோம். மக்களின் கருத்துகளை அடிப்படையாக வைத்து தமிழ்நாடு வளர்ச்சிக்கான 14 அம்சங்களை அறிமுகப்படுத்துகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி என்பதன் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தமாக 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
2030 ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு(AI) ஆய்வகம் அமைக்கப்படும்.
இடைநிற்றல் இல்லா கல்விக் கனவு மூலம் அனைவரும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவோம்.
2030ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆதி திராவிடர், பழங்குடியின குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். நூலகம் 5.0 செயல்படுத்தப்படும்.

அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்.பள்ளிகளில் விளையாட்டு, உளவியல் பாதுகாப்பு, வாழ்க்கைத்திறன் கல்வி உறுதிப்படுத்தப்படும்.
அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஜவளி ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும்.
மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1,000 மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.
சிறுபான்மையினர் வணிகம் மற்றும் தொழில் தொடங்க கடன் பெறும் முறை எளிதாக்கப்படும்.
3 கோடி லிட்டர் பால் உற்பத்தி 2030ம் ஆண்டில் 4.5 கோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும், நுண்ணுயிர் பாசனம் 21 லட்சம் ஹெக்டேருக்கு உயர்த்தப்படும்
தமிழ்நாட்டிற்கான என்னுடைய கனவு
தமிழ்நாட்டிற்கான என்னுடைய கனவு என்ன தெரியுமா, இந்த நாடு முழுவதும் சமத்துவபுரம் ஆக வேண்டும். எங்கும் சமூகநீதி ஒலிக்கனும். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கே வேண்டும்.

இது என்னுடைய கனவு மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் கனவு, பெரியார், அண்ணா, கலைஞர் கண்ட கனவு. இதனை செயல்வடிவமாக்க மாவட்ட வாரியாக செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்.
இதன் மூலம் 2030 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும். இது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்கு கொடுக்கும் உறுதிமொழி" என கூறினார்.