பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை தடுக்க வேண்டும்....முதல்வர் ஸ்டாலின்
பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
2 நாள் மாநாடு
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளின் பங்கேற்கும் 2 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்திலலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் துவங்கியுள்ள இந்த மாநாட்டில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட மாநிலத்தின் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மாநிலத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும் என்று கூறி, குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றார்.
பிரத்யேக வாட்ஸ் - அப்
மேலும், பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கேன பிரத்யேக வாட்ஸ் - அப் எண்ணை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விரைவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க செயல்படுவார்கள் என்று சுட்டிக்காட்டிய முதல்வர் முக ஸ்டாலின், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் தெரிவித்து மேலும் பல அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.