தமிழன் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை - முதல்வர் ஸ்டாலின்

M K Stalin
By Karthikraja Jan 25, 2025 07:30 PM GMT
Report

 தமிழ்நாட்டின் மீது அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு படையெடுப்பை ஒன்றிய பாஜக அரசு நடத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள்

1938 நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்று தியாகிகள் நடராசன், தாளமுத்து உள்ளிட்ட பலரும் பலியாகினர். இவர்களின் நினைவை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

mk stalin

சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து இன்று மாலை(25.01.2025) சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தி மொழி திணிப்பு

இந்த நிகழ்வில் பேசிய அவர், "தமிழை காத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். மொழிப் போராட்டத்தின் மையமாக திமுக இருந்தது. அன்னை தமிழை அழிக்க இந்தி மொழி திணிக்கப்படுகிறது. இந்தியை அல்ல, எத்தனை மொழிகளை திணித்தாலும் நம் தமிழ் அழிந்துவிடாது. 

மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் நம் பண்பாடே சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நமது அடையாளம் போய்விடும். அடையாளம் போனால், தமிழன் என்று சொல்லிக்கொள்கிற தகுதியை இழந்துவிடுவோம். தமிழன் என்ற தகுதியை இழந்தால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. 

mk stalin

தமிழ்நாட்டின் மீது அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு படையெடுப்பை ஒன்றிய பாஜக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மொழிப் போர் இன்னும் முடியவில்லை, இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.

இருமொழி கொள்கை

1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர்தான் தமிழ்நாட்டை இருமொழி கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம். அதற்கு சிக்கலை உருவாக்கத்தான் மும்மொழி கொள்கையை கொண்டு வர பார்க்கிறார்கள்.

மருத்துவம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த வளர்ச்சியை பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. தமிழகத்திற்கு தர வேண்டிய பேரிடர் நிவாரண நிதி, பள்ளி கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதி ஆகியவற்றை தர மறுக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரே இல்லை.

சமஸ்கிருதம் இந்தி

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா? அல்லது சமஸ்கிருதத்தை திணிக்கலாமா? என ஒன்றிய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஒற்றை மதம், ஒற்றை மொழிதான் இந்தியாவில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. 

mk stalin

சமஸ்கிருதத்தை நேரடியாக கொண்டு வந்தால் கடுமையான எதிர்ப்பு வரும் என்பதால், இந்தியை முதலில் கையில் எடுப்பார்கள். இந்தியை அரியணையில் அமர்த்திவிட்டு, சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். முதலில் இந்தி, அதன்பின் சமஸ்கிருதம். இதுதான் பாஜகவின் கொள்கை.

டெல்லியில் போராட்டம்

இன்றைக்கு அந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற இந்த மேடையிலிருந்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்கலைகழங்களை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கக்கூடிய ஆபத்தை முறியடிக்க நமது கழகத்தின் மாணவரணியின் சார்பில் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து மாபெரும் போராட்டம் நடைபெறும்.

மொழிப்போரில் முதல் தியாகிகளாக இருக்க கூடிய தாளமுத்து மற்றும் நடராஜன் ஆகியோர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன், இரண்டு கோரிக்கைகளை வைத்தார். இருவரின் திருவுருவச் சிலையை , தமிழ்நாடு அரசு விரைவில் நிறுவ இருக்கிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். " என பேசினார்.