வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டும், வழக்கம் போல் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிமன்ற உத்தரவை அன்றே நிறைவேற்றிய அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறி, காவல்துறை தீபம் ஏற்ற அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து அங்கு கூடிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்புரங்குன்ற விவகாரம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொடனியில் அடித்து விரட்டுவார்கள்
இந்நிலையில், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "நம்முடைய சிந்தனை தமிழ்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் கொண்டுள்ளதாக உள்ளது. சில கட்சிகளுக்கு கலவர சிந்தனை தான் உள்ளது.
நாம் மதுரைக்கு மெட்ரோ வேண்டும் என கேட்டால், மத்திய பாஜக அரசு வேண்டாம் என்கிறது. மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை என பாஜக தலைவர்கள் திமிராகப் பேசுகின்றனர்.
பாட்னா, ஆக்ரா, இந்தூர் மெட்ரோக்களுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது ? ஏன் எங்கள் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடக்கூடாதா? மதுரைக்காரங்கன்னா உங்களுக்கு இளக்காரமா போச்சா?

காலம்காலமாக தீபம் ஏற்றுவது போல் கடந்த 3ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் பால தீபம் ஏற்றப்பட்டது. உள்ளூர் மக்கள், பக்தர்களுக்கு தெரியும். அவர்களும் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு சென்றார்கள். ஆனால் திருப்பரங்குன்றத்தில் எதற்காக பிரச்சனை நடக்குது. எதற்காக பிரச்சனையை கிளப்புராங்க நோக்கம் என்ன என மக்களுக்கு தெரியும்.
ஆன்மிகம் என்பது மன அமைதி, நிம்மதி தந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பிரிவுகள், பிளவுகளை உண்டு செய்து சமூகத்தை துண்டாட சதி செய்கிறார்கள். இது ஆன்மிகம் இல்லை, கேடுகெட்ட மலிவான அரசியல்.
மதுரை மக்கள் ஊருக்கு வருகின்றவர்களை நன்றாக வரவேற்பார்கள், அதே நேரம் வன்முறையை தூண்டக் கூப்பிட்டால், பொடனியில் அடித்து விரட்டுவார்கள். அமைதி பக்கம் நின்ற மதுரை மக்களுக்கு நன்றி மற்றும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.