‘உங்க நல்ல எண்ணத்திற்கு நன்றி’ - ஓபிஎஸ்-ஐ பாராட்டி நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் : ஏன் தெரியுமா?
கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது. இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.
மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்று கூறி அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே நமது அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
மேலும், ₹80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ₹28 கோடி மதிப்பில் மருந்து, ₹15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம், ஆனால், ஒன்றிய அரசின் அனுமதியோடு தான் இதனை நாம் அனுப்ப முடியும் என்று கூறி தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார்.

இதை தொடர்ந்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழர்கள் மனித நேயத்தில் உலகத்திலேயே மிகவும் உயர்ந்தவர்கள் என்பதன் அடையாளமாக இந்த தீர்மானம் உள்ளது. அரசால் வழங்கப்படும் ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரண நிதியுடன் நான், என் குடும்பத்தின் சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக தருகிறேன் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ்-இன் இந்தப் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். மற்றவர்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இதனை அறிவித்துள்ளார்.
அவருடைய நல்ல எண்ணத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.