தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு - மு.க.அழகிரி உள்ளட்ட 17 பேரும் விடுதலை!
தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரியை தாக்கிய வழக்கு
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதுரை, வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, பணப்பட்டுவாடா நடந்ததாக உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தப்போது, திமுகவினர் அவரை தாக்கியதாக கூறி போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
மு.க.அழகிரி விடுதலை
அதன் அடிப்படையில் மு.க.அழகிரி, முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், "மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை. பணப் பட்டுவாடா புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம்.
அப்போது கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதால் வாக்குவாதம் எழுந்து, மோதலாகியது" என்று தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தாசில்தார் காளிமுத்து நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறினார். அதன்பின், மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.