சிறுமி மித்ரா மருந்துக்கான வரி ரத்து - முதல்வருக்கு மகேந்திரன் நன்றி!!
சிறுமி மித்ரா சிகிச்சைக்காக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வருக்கு, திமுகவில் இணைந்த மகேந்திரன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி என்ற தம்பதியின் மகள் மித்ரா. இரண்டு வயதான இந்த சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, சிறுமிக்கு முதுகுத் தண்டுவடம் சிதைவு நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இந்த நோயினால் சிறுமி மித்ராவால் மூச்சு விடவும், உணவை விழுங்கவும் முடியாது. அதோடு தானாக குனியவோ, நிமிரவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாது. இதனால் சிறுமி மிகவும் அவதிபட்டு வந்தார்.
இந்த நோயை குணப்படுத்துவதற்கு ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் சோல்ஜென்ஸ்மா என்ற மருந்தை வாங்க வேண்டும். அதின் விலை 16 கோடி ரூபாய். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை சேர்த்து 22 கோடி ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை இரண்டு வயதாகும் முன்பு இந்த மருந்து செலுத்தினால் மட்டுமே குணமடைய வைக்க முடியும் என்றும் கூறினர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு வேண்டும். உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்கவரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர வரிகளுக்கு விலக்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தை அடுத்து சிறுமி மித்ராவின் சிகிச்சை மருந்துக்கான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரத்து செய்து அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுகவில் இணைந்த மகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், குழந்தை மித்ரா போன்று தமிழ்நாட்டில் ஆண்டிற்கு ஏறத்தாழ 90 - 100 குழந்தைகள் #SpinalMuscularAtrophy என்கின்ற அரிய வகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அதற்கான மருத்துவச் செலவு மட்டுமே ரூ.16 கோடி அளவில் உள்ளது.
அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளும் அதிகம் என்றும், இதன் காரணமாக மருத்துவம் அளிப்பதில் ஏற்படும் இடர்களை களைந்திட அம்மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து முறையான கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி,
மக்கள் நலன் காத்திட உரிய முயற்சி எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.