"மிஷன் ஆக்சிஜன்" நிறுவனத்துக்கு இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ரூ.1 கோடி நிதி உதவி

fund tendulkar mission oxygen one crore
By Praveen Apr 30, 2021 03:40 AM GMT
Report

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் "மிஷன் ஆக்சிஜன்" என்ற நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,

"கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தீவிர கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.

இச்சூழலில், 250-க்கும் அதிகமான இளம் தொழில்முனைவோர் குழு, ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு நன்கொடை அளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக மிஷன் ஆக்சிஜன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் நானும் பங்காற்றியுள்ளேன். அவர்களின் முயற்சி விரைவில் இந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன். நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. அது எனக்கு வெற்றிபெற உதவியது.

அதேபோல், இன்று இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவருக்கும் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.